- பெயர்: அனிதா
- வயது: 17
- மதிப்பெண்கள்:
- பொது தேர்வில்: 1176
- நீட் தேர்வில்: 76
- மருத்துவம் பயில வாய்ப்பு:
- 2016 ஆம் விதிப்படி : நிச்சயம்
- 2017 ஆம் விதிப்படி: முதலில் நிச்சயம். பின்னர்: இல்லை..பின்னர் நிச்சயம்...பின்னர் இல்லை..பின்னர் நிச்சயமாக இல்லை.
அந்த பிஞ்சு உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும்? குழந்தை பருவத்தில் இருந்து கொண்டிருந்த மருத்துவ கனவு நிறைவேறும் என்கின்ற நம்பிக்கை. பின்னர் கிட்டாமல் போன பொழுது எழுந்த மனமுடைவு. துக்கம். இவற்றை ஆற்றிக்கொள்ளும் புறத்தெ மீண்டும் கிட்டிவிடும் என்று துளிர்த்து எழும் நம்பிக்கை. பின்னர் அது இயலாது என்று தெரியும் பொழுது வரும் அதே மனமுடைவு. துக்கம்.. இவற்றையெல்லாம் தன்னியல்பில் எடுத்துக்கொண்டு , சமூகம் சொல்லிக்கொடுத்த விதி படி தன்னுரிமைக்காக உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் என பல சபைகளிலும் போராடிய அசாத்திய தைரியம். பின்னர் எல்லா வழிகளும் மூடப்பட்டதால் எழுந்த வெஞ்சினம். எதிர்காலத்தை பற்றி மனதில் உருவாகிய வெற்றிடம். இவை அனைத்தையும் தன்னுடைய பிழையாகவே கருதி தன்னுயிரையும் துச்சமென கருதி மாய்த்து கொண்ட கொடூரம்..
சற்றே பின்வாங்கி பார்த்தோமானால் அனிதாவின் இச்செயல் நம்நாட்டின் எதிர்காலத்திற்கு அவள் எழுதிய தீர்ப்பாகும்.
நாட்டின் முக்கோடி முலைகளிலும் உள்ள எதோ ஒரு கிராம/நகரத்தின் மாணவ மாணவியர் தமக்கென ஒரு இலட்சியம் அமைத்து கொள்வது பிழையா?
படிக்க பிரியப்படும் ஒரு மாணவிக்கு, கல்வி கற்று கொடுக்க இத்தனை தேர்வுகள் தேவையா? எல்லோருக்கும் அவரவர் பிரியப்படும் பாடங்களை கற்று கொடுப்பதில் என்ன தடை இருக்கிறது?
நாமே மருத்துவத்தில் 2000 இடம். பொறியியலில் 10000 இடம் என்று முடிவு செய்து கொள்கிறோம். கேட்டால் இவ்வளவு தான் நம்மால் முடியும் என்று நொண்டி சாக்கு வேறு!!
ஒவ்வொரு வருடமும் நம்நாட்டில் படிக்க முயலும் மாணவர் தொகை பல லட்சம். இதில் சில ஆயிரங்கள் மட்டுமே மருத்துவம் படிக்க வேண்டும் என்று சொல்வது பெரிய அநீதி. நம் மக்கள்தொகைக்கு தேவைபடும் மருத்துவர்களை 1000, 2000 இடங்களால் சரி செய்ய முடியுமா?
இது தான் நமது சமூகத்தின் மிகப் பெரிய ஊழல்.
கருத்துகள்
கருத்துரையிடுக